தெள்ளை
Read English
Video 1 Video 2 Video 3
தெள்ளை என்னும் இந்த கிராமம் ஜவ்வாது மலைக்கு அடியில் உள்ளது. சுற்றி உள்ள மலைகளுக்கு நடுவில் இந்த கிராமம் அமைந்திருப்பது இந்த கிராமத்துக்கு பேரழகு தருகிறது.
தெள்ளயில் குறைந்த அளவு மக்கள் வாழ்கிறார்கள், கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன சுமார் 150க்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர், இவர்கள் பெரும்பாலும் சொந்த நிலங்களில் வேலை செய்கின்றனர், சில பெண்கள் நாகநதி சென்று கூலிவேலை செய்கின்றனர், ஆண்கள் சிலர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு வேலை செய்ய செல்கின்றனர்.
இங்கு ஒரு தொடக்க பள்ளி உள்ளது, 3 அறைகள் மட்டும் உள்ள இந்த பள்ளியில் சுற்றி உள்ள மலைக்கிராமங்களில் இருந்து வந்து பிள்ளைகள் படிக்கிறார்கள், மூன்று அறைகளில் ஓன்று சமையல் அறை, ஓன்று படிக்கும் அறை மற்றொன்று தாங்கும் அறை, படிக்கும் அறையில் 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு ஒரே அறையில் பாடம் நடத்துகிறார்கள்.
இந்த கிராமத்திற்கு தனி அஞ்சலகம் உள்ளது அஞ்சலகத்திற்கும், பள்ளிக்கும், கிராம மக்களுக்கும் மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது சாலை வசதி இல்லாமல் இருப்பதும், ஒன்பது ஆற்றை கடந்து செல்வதும்தான். இங்கு வாழும் ஒவ்வொருவரின் முக்கிய தேவை சாலை வசதிதான். இங்கு வாழும் பிள்ளைகள் 5ம் வகுப்பிற்க்குமேல் படிக்க வேண்டுமென்றால் இந்த ஒன்பது ஆற்றை கடந்து 10, 12 கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவரத்திற்க்கோ அல்லது கீழரசம்பட்டுக்கு நடந்து செல்லவேண்டும்.
இங்கு வாழும் மக்கள் ஆடு, மாடு, கோழி, பன்றி, நாய், பூனை போன்றவற்றை வளர்க்கிறார்கள். நெல், சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை அதிகமாக பயிரிடப்படுகிறார்கள். மா, பலா, வாழை என முக்கனியும், தென்னை மரங்களும் இங்கு காணப்படுகிறது. மேலும் தற்போதைய காலநிலைக்கு ஏற்ப பருத்தியும் சிலர் பயிர் செய்து வியாபாரம் செய்ய துவங்கி உள்ளனர். சீதா மரமும், புளிய மரமும் அதிக அளவில் வளர்ந்து இவர்களுக்கு, பயன்படுகிறது.
அருகில் மலை இருப்பதால் மழைக்காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊற்று நீர், கிணற்று நீர் இவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. மேலும் பலவகையான காட்டு பழங்கள் இவர்களுக்கு இயற்கையாகவே கிடைக்கின்றன. பொருளாதாரத்திலும், வசதி வாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், பழங்கால வாழக்கையை இவர்கள் வாழ்வதும், இயற்கையோடு ஒன்றி வாழ்வதும் நம்மை போன்றோருக்கு இந்த இடம் சொர்க்கமாகும்.

Comments
Post a Comment